×

தாமிரபரணி மகாபுஷ்கர விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

தூத்துக்குடி, அக்.10: தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்கு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என எஸ்பி முரளி ராம்பா தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவை யொட்டி பாதுகாப்பு முன்னோற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் எஸ்.பி. முரளி ராம்பா தலைமையில் நடந்தது.  அப்போது அவர் பேசியதாவது: தாமிரபரணி மகாபுஷ்கர விழா நாளை (11ம் தேதி) முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு முறப்பநாடு, அகரம், நாணல்காடு, ஆழிக்குடி, கருங்குளம், வைகுண்டத்தில் கள்ள பிரான்கோயில் அருகில், ஆழ்வார்திருநகரி திருசங்கனை, அகோப்பில்லா, காந்தீஸ்வரர், பட்சிராஜன், நாயக்கர், பிள்ளையார்கோயில், தோணித்துறை, பால்குளம், தென்திருப்பேரை, குரங்கணி, ஏரல் இரட்டை திருப்பதி, மங்களகுறிச்சி, சேர்மன்கோவில், வாழவல்லான், உமரிக்காடு, சேதுக்குவாய்த்தான், சொக்கப்பழக்கரை, முக்காணி ஆற்றுப்பாலம் மேற்கு மற்றும் கிழக்கில் 2 இடங்கள், சேர்ந்த பூமங்களத்தில் 2 இடங்கள் என மொத்தம் 29 இடங்களில் படித்துறைகள் கண்டறியப்பட்டுள்ளன.
 இந்தப்படித்துறைகளில் பொதுமக்கள் புனித நீராடுவார்கள் என்பதால் இங்கு பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 3 எஸ்.பிக்கள் தலைமையில், 5 ஏ.டி.எஸ்.பிக்கள், 16 டி.எஸ்.பிக்கள், அதிகாரிகள் உட்பட சுமார் 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற 90 போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினரும், மீன் வளத்துறையிலிருந்து 24 படகுகளும், தீயணைப்புத்துறையிலிருந்து 3 படகுகளும் இப்பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர். புனித நீராடும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Tags : policemen ,Thoothukudi district ,Thamiraparani Mahabushkara Festival ,
× RELATED மது கடத்தியவர்களிடம் லஞ்சம் பெற்ற...